Thursday, May 27, 2021

தாத்தா


     தாத்தாவை நான் அப்படி திட்டியிருக்கக் கூடாது .உண்மையில் என் அப்பாவை விட தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தாத்தா என்கிற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர் .  முதலில் உள்ள 'தா'வுக்கு அர்த்தம் சேர்க்கும் விதமாக நல்ல பெயரும் ,  புகழும் எங்கள் குடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுத்தவர் . இரண்டாவது உள்ள 'தா'வுக்கு அடையாளமாய் நிறைய சொத்து, சுகங்களை சம்பாதித்துக் கொடுத்தவர். இவ்வளவுக்கும் தாத்தா-தான் அவருடைய அப்பா அம்மாவுக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை , அவருக்குப் பின் ஒரே ஒரு தங்கை . 


      அவருக்கு முன்னும் பின்னும் பல பிள்ளைகள் பிறந்த போதும் அவரையும் , ஒரே ஒரு தங்கையையும் தவிர மற்ற அனைவரும் வெவ்வேறு காரணங்களால் இறந்துவிட்டார்கள். எல்லோருக்குமே அவரவரது அப்பாதான்  ஹீரோ  , எப்போதென்றால் டீன்ஏஜ் என்று சொல்லப்படுகின்ற வயதில்தான் . ஆனால் அதற்கு முன்பாக நிச்சயம் ஹீரோ எல்லோருக்குமே அவரவர்களுடைய  தாத்தாதான் . தாத்தாவை கடின உழைப்பாளி என்று மட்டும் சொல்லி நிறுத்தி விட முடியாது அதற்கும் மேல் அவர் ஒரு சிறந்த நிர்வாகி, ஏகபத்தினி விரதன், வியாபாரி , விவசாயி, பண்பாளர், பாசம் உள்ளவர் ,நாலும் தெரிந்தவர் ,நயமான பேச்சாளர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு தாத்தா.


     தாத்தாவுக்கு என் அப்பாவையும் சேர்த்து ஏழு பிள்ளைகள். அப்பாவுக்கு முன் ஒரு அக்கா ,பின் இரண்டு தம்பிகள் ,மூன்று தங்கைகள். அப்பாவிநுடைய அக்காவை பெரிய அத்தை என்றுதான் நான் உட்பட எல்லோரும் அழைப்போம். நான், என் அண்ணன், தங்கை மூவரும் மற்ற எல்லா பேரப்பிள்ளைகளையும் விட அதிகமாக தாத்தாவுக்கு அருகாமையில் நீண்ட நாள் வசித்திருக்கிறோம் என்பதால் அவர் மேல் அதிகமான பாசமும், கோபமும் உண்டு. யார் மேல் நாம் பாசமாக இருக்கிறோமோ, அவர்கள் மீதுதானே கோபப்பட முடியும். 

    

        என்னுடைய பின்பாதி பெயர்  தாத்தாவினுடயதுதான் .தாத்தா எனக்கு என்ன செய்யவில்லை? எல்லாமே செய்திருக்கிறார். முகம் கழுவி விட்டு இருக்கிறார் ,காப்பி போட்டுத் தருவார், சோறு ஊட்டி விடுவார், மரமேறி தேங்காய் வெட்டுவார், பனை ஏறி கள் இறக்கிக் தருவார் , குளிக்க துண்டு தருவார், தலை  துவட்டுவார், செலவுக்கு காசு தருவார், சின்ன வயதில் குண்டி கூட கழுவிவிட்டு இருக்கிறார். உண்மையில் தாத்தா எனக்கு ஒரு அப்பப்பா தான்!.


       எங்களுக்காகவே (பேரப் பிள்ளைகளுக்காக)  அரை குறுக்கம் வாழை போடுவார் .  அதில் வருகிற வாழை இலையை தினமும் டீக்கடையில் போட்டுவிட்டு ,  தினமும் போண்டா, வடை வாங்கி தருவார்.


   அவருடைய அப்பா, தாத்தா சிறுபிள்ளையாய் இருக்கும் போதே இறந்து விட்டார். அதன் பின் குடும்ப பாரம் முழுவதும் தாத்தா தலையில்தான். அப்போதெல்லாம் விவசாயத்தில் நவீன கருவிகள் கிடையாது அல்லவா ? தாத்தா வயலுக்கு நீர் பாய்ச்ச விடிய விடிய கமலை தான் இறைப்பாராம் ,  ஆரம்ப காலத்தில் மாடுகளுக்கு பதிலாக ஒரு பக்கம் தாத்தாவும் ,மற்றொரு பக்கம் அவருடைய அம்மாவும் . பின் தாத்தாவும், அவருடைய தங்கையும். பின் தாத்தாவும் ,பாட்டியும். பின் தாத்தாவும், என்  அப்பாவும் . 


     'அ' - வில் ஆரம்பித்து

 'ன்' - ல் கொண்டுவந்து முடித்தவர் . நீண்ட  நெடுங் கரிய கால்கள் ,நன்கு படிய வாரப்பட்ட சிறிதளவு தலை முடிகள், தலையில் எப்போதும் துண்டு ஒன்று கட்டியிருப்பார், ஊருக்குள் வரும்போது அதைத் தோளில் போட்டிருப்பார்.


   உங்களுக்கெல்லாம் ராஜ்கிரண் என்றால் என்ன ஞாபகம் வரும்? முழங்காலுக்கு மேலே தூக்கி கட்டிய வேட்டியும், ஆட்டு எலும்பும்தானே .  ஆனால் நேற்று 'வேங்கை' படத்தில் ராஜ்கிரணை பார்த்தபோது என் தாத்தா ஞாபகத்திற்கு வந்தார் .அவருடைய இரண்டாவது படமான அரண்மனைக்கிளி படத்தை நான்,தாத்தா, ஜெயபால் அத்தான் மூவரும் சேர்ந்து சுரண்டை நடராஜ் தியேட்டரில் பார்த்தோம்.

   

     உடம்பு சரியில்லை என்று தாத்தா படுத்ததே கிடையாது, கால் மூட்டு, குடலிறக்க நோய் இந்த இரண்டுக்கும் அறுவை சிகிச்சை செய்ததைத் தவிர. புரோட்டாவை முதன் முதலில் எனக்கு கண்ணில் காட்டியதே தாத்தா-தான்.

  

    டீயும் ,காப்பியும் அவரைப்போல அருந்த முடியாது. அதை குடித்துக்கொண்டே நாள் முழுக்க வேலை செய்வார் . நெஞ்சு மரத்தில் படாமல், அவர் தென்னை மரத்தில் ஏறுகின்ற அழகை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் . இன்றும் கூட எங்காவது தேங்காய்ப் பூ துண்டை பார்க்கும்போதெல்லாம், என் தாத்தாவை பார்ப்பது போலவே இருக்கும்.


    வெளியூர்களுக்கு போகும்போது வெள்ளை வேட்டி உடுத்தி ,சட்டை போட்டு ,தோளில் தேங்காய்ப்பூ துண்டு போட்டுக் கொண்டுதான் கிளம்புவார் .ஒரு பண்ணையாருக்கு ரிய  தோரணை எப்போதுமே அவரிடம் உண்டு .அவருடைய பெயர் இன்னாசி, பெயருக்கேற்றார் போல எல்லாவற்றோடும் இன்னபிற 'ஆசி'களையும் இறைவன் அவருக்கு  கொடுத்திருந்தார் . புனைப்பெயர் பால்சாமி - பால் என்பதே ஆசீர்வாதத்தையும் செல்வத்தையும்தான் குறிக்கும் .என்னைப் பொருத்தவரையில் என்ன ,எல்லோரைப் பொறுத்தவரையிலும் உண்மையாகவே என் தாத்தா  'பெயர் விளங்கியது'.


       நிற்க! மீண்டும் முதல் வரிக்கு வருவோம் . தாத்தா ஒரு இருபது சென்ட் நிலத்தை விற்று விட்டார் , இது தெரிந்ததும் நான் கோபத்தில் அவரிடம் சென்று , இந்த இடத்தோடு நிறுத்திவிடாமல் இன்னும் எவ்வளவு இடத்தை உங்களால் விற்க முடியுமோ, எல்லாவற்றையும்  விற்றுவிடுங்கள்  என்று கோபத்தில் சில,பல வார்த்தைகளை உதிர்த்துவிட்டேன். எனக்கு கள் என்னும் அமுதத்தை அருந்தக் கொடுத்த தாத்தாவின் மேல் வெந்நீரை ஊற்றி விட்டேன், எனக்கு போண்டா வாங்கி கொடுத்த தாத்தாவின் மேல் கல் எறிந்து விட்டேன்.  என்னை சைக்கிளில் அமர வைத்து ஆறுகளை சுற்றிக் காட்டிய தாத்தாவுக்கு, நான் இருந்த இடத்திலிருந்தே சாக்கடையை காண்பித்து விட்டேன். 


    ஆனால் அப்போது கூட தாத்தா என்னை திட்டவில்லை,  எதிர்த்துப் பேசவும் இல்லை.  யப்பா , நான் வேண்டாம்! வேண்டாம் என்றேன், உன் பாட்டிதான் கேட்கவில்லை என்றார்! . இது நடந்தபோது தாத்தாவுக்கு வயது 83, எனக்கு 29. ஒருவேளை நான் என் தாத்தாவின் இடத்தில் இருந்திருந்தால் ,அது நான் சம்பாதித்தது ! நீ என்ன  பச்சா? என்னை கேள்வி கேட்பது என்று கூறியிருப்பேன்! இதை நான் எழுதுகிற இன்று என் தாத்தா இறந்து அரை வருடம் ஆகி விட்டிருந்தது.


   ஆனால் தாத்தா அந்த இடத்தை  விற்றது கூட நன்மைக்குத்தான். என்னுடைய மூன்றாவது அத்தை ஒரு சில காரணங்களால் சில வருடங்களுக்கு முன்பு மரித்துப் போயிருந்தாள். அவருடைய பிள்ளைகளுக்கு உதவும் விதமாக தான் தாத்தா அந்த இடத்தை  விற்று இருந்தார். உண்மையில் தாத்தாவை பொருத்தவரை அவர் எல்லோருக்கும் எல்லாவற்றையும் நன்மையாகவே செய்ய நினைத்தார், செய்தும் முடித்தார்.


        இது நடந்து சில மாதங்கள் கழித்து  மூச்சு விடுவதில்  அவருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது .  அன்று இரவு ஒரு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றோம் .அங்கு நள்ளிரவு 2:00 மணிக்கு நிலைமை மோசமாக  அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று விடுங்கள் என்றார்கள் . பின் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் கொஞ்சம் பரவாயில்லை. பின்னர் மீண்டும் நிலைமை பழைய கட்டத்தை எட்டிய உடன் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவம் பார்த்தும் பெரிதாக எந்த முன்னேற்றமும் வரவில்லை. பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கொண்டு வந்த இரண்டொரு நாட்களில் இரவு 11 மணிக்கு தாத்தா இறந்து விட்டார்.


    என்னளவில் அவர்  அழுது நான் பார்த்தது கிடையாது. சில வருடங்களுக்கு முன் மூன்று பிள்ளைகளை நிற்கதியாய் விட்டுச்சென்ற அத்தைக்காகத்தான் அழுதார் . அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களும், அவரோடு நான் இருந்த நாட்களும் உண்மையிலே ஆசிர்வதிக்கப்பட்டவைகள் . அது மருத்துவமனை தான் எப்படியாவது உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்ற போராட்டம் தான், ஆனால் என்னளவில் அது ஒரு கோவில்.  


       என் தாத்தா என்ற தெய்வத்துக்கு நான் பணிவிடை செய்த நாட்கள் உண்மையிலேயே மகத்தானவை. எனக்கு விரல் பிடித்து நடை பழகி தந்த  தாத்தா ,எழுந்து என் கையை பிடித்து நடந்து விட மாட்டாரா என ஏங்கிய நாட்கள் அவை .நான் அந்த காலகட்டத்தில் வேலை எதுவும் தேடாமல் , வீட்டில் இருந்தேன். எல்லோரும் என்னை ஆசிர்வாதம் அற்றவன் என்று கூறினார்கள் . ஆனால் உண்மையில் நான் மார்த்தாள்-ஐ போல ஆசீர்வதிக்கப்பட்டவன்.


    அதைப் பணிவிடை என்று கூட சொல்ல கூடாது, என் கடமையே அதுதானே! ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் வந்தது. ஆனால் சாண் ஏறினால், முழம்  சறுக்கிய கதையாகத்தான் எல்லாம் ஆகிவிட்டது . 


      என்னைக் கேட்டால் , எல்லோருமே சிறிது காலம் மருத்துவமனையிலிருந்து பின் இறக்க  வேண்டும் என்பேன். ஏனென்றால் அப்போதுதான் எல்லோருடைய அன்பையும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். 

 ' இறந்தவுடன்  அழுவதல்ல  வாழ்க்கை ! இறக்குமுன் அன்பை வெளிப்படுத்துவதேவாழ்க்கை!'

  

     பலவிதமான மனிதர்கள் ? எத்தனை விதமான மனிதர்கள்,  என் தாத்தாவை பார்க்க வந்தார்கள் தெரியுமா? அவர்கள் மீது நான் வைத்திருந்த பிம்பங்கள் எல்லாம் சுக்கு நூறாக சிதறின. அத்தைகள் முதல் அடுத்த ஊர் மனிதர்கள் வரை நிறைய பேர் மருத்துவமனைக்கு வந்தார்கள். பலர் தாத்தா  காதுபட நம்பிக்கையாக பேசுவார்கள் ,ஆனால் வெளியே சித்தப்பாவிடம் சென்று  "அவ்வளவுதான்'!  என்பார்கள் .ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி என் அத்தைகளும், அப்பாக்களும் தாத்தாவின் அன்பை பாட்டாகவே பாடி விட்டார்கள் . 


     வாத்தியார் சொன்னார் 'ஒரு முறை நாலு பேர் இருக்கிற இடத்தில், பெரிய சித்தப்பா அவரை ஏல! என்று அழைத்தாராம் .  இதைக்கேட்ட தாத்தா அவரை கடிந்து கொண்டு அவனை (தம்பியை) பேர் சொல்லிக் கூப்பிடு, ஏல! என்காதே என்றாராம் '. யோசித்து பார்த்தேன், என்னை கூட ஒருமுறையாவது தாத்தா ஏல! என்று சொன்னதே கிடையாது . உண்மையிலே என் தாத்தா பலே! பலே!


     இரவு பன்னிரண்டு முப்பது  மணிக்கெல்லாம் சென்று  ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டுகிறோம். பகல் ,இரவு பாராது எங்களை உயர்த்திய தாத்தாவுக்கு எங்கள் அளவில் நல்ல துணிமணிகள் எடுத்து அனுப்பி வைப்பதற்காக . வேட்டி ,பட்டு சட்டை, சால்வை கடைசியாக மறந்துவிடக் கூடிய தா என்ன அது?  தேங்காய் பூ துண்டு.


      மூத்த மகளுக்கு தான் தாத்தாவின் முதல் தாய்ப்பால். கடைசியாக இறக்கும் முன் ,அந்தப் பாலை ஊற்றி கணக்கை நேர் செய்ததும் அந்த மூத்த மகள் தான். மண்ணாக பிறந்து, மண்ணிலே திரிந்தவர் , மீண்டும் மண்ணுக்கே திரும்புகின்றார். பாட்டி நன்கு ஒப்பாரி வைத்தது,' என் பணப்பெட்டி போகுதே என்று'  .ஆனால் என் தாத்தா பணப்பெட்டி அல்ல ,அவர் ஒரு காணிக்கைப் பெட்டி! 'காணிக்கைப் பெட்டியில் தான் வாழ்பவன் காணிக்கை போடுவான், வாழாதவன் விண்ணப்பம் போடுவான்'.   

 

      அழுகை பெண்களுக்கு மட்டும் தான் பிறவிச்சொத்து என்பது போல, ஆண்கள் அழுகையை அடக்கிக்கொண்டார்கள், அல்லது அதை மறந்து விட்டிருந்தார்கள்.  அம்மாக்களும், அப்பத்தாக்களும், அத்தைகளும்,  சித்திகளும்,மதினிகளும் - 'அ'ழுதார்கள் . அப்பாக்களும், தாத்தாக்களும், மாமாக்களும், சித்தப்பாக்களும், அண்ணன்களும் அடக்கம் செய்வதற்கு 'ஆ'வன செய்தார்கள்.


              விமர்சனங்களுக்கு உட்பட்டவன்தான் மனிதன், அவன் வாழ்ந்த வாழ்க்கையும் கூட விமர்சனங்களால் நிறைந்ததுதான். என் தாத்தாவும் அதற்கு விதிவிலக்கல்ல .என் தாத்தாவின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள். 


(I)கஞ்சன் -  சொன்னவர்கள் எல்லோரும் வள்ளல்கள் அல்ல ,

 (II)அலப்பரை -  வேலை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் கூறியது ,

(III)வட்டிக்கு  விடுபவர் -  கூறியவர்கள் எல்லாமே கடனாகக் கொடு - வட்டி வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று நெருக்கியவர்கள் .

 

  தொடை தெரிய வேட்டி கட்டி இருப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் , நான் கவனிப்பது அவர்களுடைய மூட்டுகளைத்தான் ,  அந்த மூட்டுகள் நடக்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த என் தாத்தாவின் மூட்டுகளை நினைவுபடுத்துகின்றன , கோவணம் கட்டி குளிப்பவர்களை பார்க்கும்போதும், வாய்க்கால் மணலில் பல் துலக்குபவர்களை  பார்க்கும்போதும் ,  தென்னை பனை மரங்களைப் பார்க்கும் போதும், எங்கள் பழைய தொழுவத்தின் செல்லரித்துப் போன கதவுகளை பார்க்கும்போதும்,  உபயோகப்படுத்தாமல் பூட்டியே கிடக்கும் மேல வீட்டைப் பார்க்கும் போதும்  உணர்வதெல்லாம் என் தாத்தா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வாசனை அங்கெல்லாம் உள்ளது . 


      தாத்தாவை குளிப்பாட்டி பெட்டியினுள் வைத்து எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். ஆண்களில் வாத்தியார் மட்டும் சிறிது கண் கலங்கி இருந்தார். நேரம் கடந்து கொண்டே போகிறது ,புற்றீசல் போல மக்கள் கூட்டம் வீடு முழுக்க நிரம்பி வழிந்தது. 

 

      பெண்ணிடமும் , புண்ணிடமும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும் போல ! புண்ணால்தான் என் தாத்தா சீக்கிரமாக இறந்துவிட்டார். அதிலும் குறிப்பாக அது படுக்கை புண், அது ஆற வேண்டும் என்பதற்காக தென்காசி சென்று  தண்ணீர் படுக்கை எல்லாம் வாங்கினோம் .  தாயின்  கருவறைக்குள் இருக்கும் குழந்தை போல அவரை காக்க முயன்றோம் . 


     கோயிலில் பாட்டு போட்டு விட்டார்கள், 'மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்குத் திரும்புவாய்!  மறவாதே என்றும்!' 


      இறுதியாக தாத்தாவை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் முன் சிறிது நேரம் அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. எல்லோருமே அழுது வற்றி , விட்டிருந்தார்கள்.   என்னை ஒருவர் ஜெபிக்க சொன்னார், உடனே நானும் ஜெபிக்க ஆரம்பித்தேன்.

" இறைவா என் தாத்தாவை எடுத்துக்கொண்டீர், இதோ பரலோகத்தில்  அவருக்காய் இடம் ஒன்றை நீர் ஆயத்தம் செய்து  வைத்துள்ளீர்  என்பதை அறிகையில் நான் மகிழ்கிறேன்....................' 

  ஜெபத்தை  முடிப்பதற்குள் நான் வெடித்து அழுதேன். என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை, 

" அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்"

     நன்கு  வெடித்து அழுதேன் . எத்தனை முறை என்னை பார்த்து சிரித்து இருப்பார் ,  என்னை சிரிக்க வைத்து இருப்பார் . இருட்டு என்பது குறைவான வெளிச்சம் என்பது உண்மையானால் ,  சிரிப்பு என்பது சிறிதளவு அழுகைதான்.  தாத்தா ........ தாத்தா என்று அழுதேன்  ,  பல பெண்கள் கூறினார்களாம் , ஒரு 'ஆம்பிளையாள் எப்படி அழுகிறது' என்று , இன்னும் பலர் என் சரீரத்தை பார்த்து 'கடை குட்டி பையன், அதுதான் இப்படி அழுகிறான்' என்றார்களாம் . 


       அடுத்த நாள் என் அண்ணன் கூறினார். ஏன் கத்தி அழவேண்டும், மனதுக்குள் அழுதால் போதாதா? என்றான்.  நான் கேட்டேன் ,'ஆமா நான் உனக்கு ஒரு சட்டை வாங்கி தர வேண்டும் என்று மனதில் நினைத்தேன் ,அது போதாதா ஏன் வாங்கி உன்னிடமே தரவேண்டும் '? என்றேன் . நினைப்பதற்கும், செய்வதற்கும் மத்தியில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ! 


     விவிலியத்தில் ஒரு வசனம் உண்டு - "இருதயத்தின் நிறைவினை வாய் பேசும் ". அப்படித்தான் அன்று என் அழுகையும்  . துரோணரை இழந்த ஏகலைவன் போல நானானேன்.  ஓடி ஓடி உழைத்த அந்த கால்களும்,  கைகளும் கட்டி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன. என் தாத்தாவின் இரண்டு உள்ளங்கைகளும் பொத்தி வைக்கப்பட்டிருந்தன  , அந்த இரண்டு கைகளிலும் கூட தருவதற்கு ஏதோ அவர் இன்னும் வைத்திருக்கிறார்.

   (தா)யைத் தந்தார் , 

    (த்)

   (தா)யாய் வாழ்ந்தார்


  பெட்டியை குழிக்குள் இறக்கி , குடிமகன் மூடியைக் கொண்டு பெட்டியை மூடினான்.  இதுவரை நாங்கள் ஊருக்கு செல்லும்போதெல்லாம் தாத்தாவை பார்க்க, அவர் வீட்டுக்கு செல்வோம் . ஆனால் இனி , தாத்தா நாங்கள்  உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார். 

 

 உண்மையில் 

   அவர் இறக்கவில்லை, இருக்கிறார்!

 அவர் மரிக்கவில்லை, மறைக்கப்பட்டிருக்கிறார் !! 


    வீட்டுக்கு வந்ததும் என் அண்ணன் மகன் ஓடோடி வந்து ,  என் அப்பாவை கட்டிக்கொண்டு 'தாத்தா" என்றான் !!!

1 comment:

KARTHI KRISHNA alies AK said...

Every ending is a new beginning.But the beginning of ending is beauty 🤗