பீரங்கியிலிருந்து குண்டு போடுவதைப் போல நிறைய மாடுகள் சாணி போட்டுக் கொண்டிருந்தன . முன்னாடி செல்லும் மாடுகளை பின்னால் செல்பவை கொம்புகளால் முட்டிக் கொண்டும் , தள்ளிக் கொண்டும் , இடித்துக் கொண்டும் சென்றன . இன்னும் சில மாடுகள் ஒன்றை ஒன்று நாவால் நக்கிக் கொண்டும் , செல்லமாக குழைந்து முட்டிக் கொண்டும் வரிசையாக மேய்ச்சலுக்கு சென்றுகொண்டிருந் தன .
காலை 9 மணிக்கெல்லாம் வெயில் தன்னுடைய கிளைகளை பூமி எங்கும் அதிகமாக பரவ விட்டிருந்தது. மரியதாய்புரம் என்ற அந்த சிறு கிராமத்தின் கிழக்கு பக்கமாய் கிட்டத்தட்ட 150 மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டான் சின்னமாடன் . அவனுடைய பெயரே இதுதான் . மாடன் என்ற பெயரில் சாமி இருக்கிறபடியால் சாமியினுடைய பெயரை இவனுக்கு வைத்தாயிற்று . அவர் சாமி என்பதால் பெரிய மாடன் , இவன் ஆசாமி என்பதால் சின்ன மாடன் .
அதிகபட்சமாக அவனுக்கு 60 வயது இருக்கலாம் , அந்த கால ஆள் . முதுமையின் காரணமாக நடையில் கொஞ்சம் தளர்வு, முதுகில் கூன் விழுவதற்கான அறிகுறிகள் , கடைவாய்ப் பற்கள் எல்லாம் விழுந்திருந்தது , உடம்பின் சதை எல்லாம் வறண்டு போய் ஒட்டிக் கொண்டிருந்தது . காதில் பீடியை செருகி வைத்திருந்தான் . ஒரு காலில் ஊதா கலர் செருப்பும் , மற்றதில் வெள்ளையும் அணிந்திருந்தான் . நன்கு சீவிய காய்ந்துபோன
பனைமட்டையை , பெரும்பாலும் உபயோகிக்காமலே கையில் வைத்திருந்தான் .
அந்த கிராமத்திலுள்ள எல்லா மாடுகளையும் மேய்க்கும் தொழிலாளி இவன்தான். இவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் சிறுவர்கள் கூட இவனை பெயர் சொல்லிதான் அழைப்பார்கள் . அந்த ஊரில் நாடார் மற்றும் தாழ்ந்த சாதியினர் ஆகிய இரு பிரிவினர் மட்டுமே வாழ்ந்து வந்தனர் . கிட்டத்தட்ட 100 நாடார் குடும்பங்களும் , 20 தாழ்த்தப்பட்ட குடும்பங்களும் இருந்தன . புரட்டாசி, ஐப்பசி தவிர குற்றால சாரலின் உபயத்தால் பெரும்பாலும் மாடுகள் மேய எப்போதுமே அங்கு பச்சை இருக்கும் . 'ஆடி அருங்கோடை' என்பார்களே , அதைப்போல ஆடி மாசம் மட்டும் மாடுகள் மேய பச்சை இல்லாததால் , அவற்றை அமர்த்துவதற்கு கொஞ்சம் சிரமப்படுவான் மாடன் .
அந்த ஊரைப் பொருத்தவரை எல்லோருடைய மாடுகளையுமே இவன்தான் மேய்த்து வருகிறான் . எல்லாம் எமதர்மன் வாகனம் எருமை மாடுகள் தாம் , சமீபத்தில் ஒரு சிலர் பசு மாடுகளும் வாங்கி விட்டிருந்தார்கள் . பசுமாடு இந்த ஊரில் யார் வாங்குவா ? வேற யாரு , பண்ணையார் குடும்பத்து ஆளுவளும் , ஒரு சில வாத்திமார்வளும்தாம் .
தினமும் மாடன் சரியாக காலை 8.30 மணிக்கு தெற்குத்தெரு பொன்னையா நாடார் மாட்டை அவுக்க ஆரம்பிப்பான் . பின் ஒவ்வொன்றாக தெற்குதெரு ஆரம்பித்து நடுத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு,வேதக் கோயில் தெரு , காலனி என்று எல்லாம் முடிந்து மாடுகளை ஊருக்கு வெளியே ஓட்டிக் கொண்டு வர 9 மணி ஆகிவிடும் . அந்த குறிப்பிட்ட 30 நிமிடமும் தெரு முழுக்க மாடுகளும் கண்ணுகுட்டிவளுமா நிறைந்திருக்கும் .
ஊரின் எல்லா பக்கங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தாலும் , கிழக்கு பக்கமாக கொஞ்சம் அதிகமாகவே உண்டு . எனவே மாடன் பெரும்பாலான நேரங்களில் ஊரின் கிழக்குப் பக்கமாகவே இருப்பான் .
மாடனுக்கு விடுமுறை என்பது அவன் உடம்பு சரியில்லாமல் வீட்டில் கிடந்தால்தான் , மற்றபடி கடிகாரத்திற்கு அடுத்து 365 நாளும் ஓடிக் கொண்டிருப்பவன் அந்த ஊரில் அவன் தான் . நம்ம என்ன சர்க்கார் உத்தியோகமா பார்க்கோம்? வாரா வாரம் லீவு போடுததுக்கு என்பான் . இந்த மாடுகளை எல்லாம் ஒரு நாள் கூட பார்க்காம இருந்தா , மாடன் எதையோ பறிகொடுத்தவன் போல இருப்பான்? அவனுடைய பிள்ளைகளைவிட இந்த மாடுகளை அதிகமாக தடவிக் கொடுத்திருப்பான் .
அவனுக்கு உடம்பு சரியில்லாத நாட்களில் அவனுடைய பிள்ளைகளில் யாரேனும் ஒருவர் மாடு மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் . அவனுடைய மனைவி பேச்சி தினமும் அந்த ஊர் சம்சாரிவளுக்கு களைபறிக்க போய்விடுவாள் . இந்த மாடு மேய்க்கும் வேலை இவனுக்கு முன்பாக இவனுடைய சின்னையா மவன் பெருமாளிடம் இருந்தது . பின் பெருமாள் கேரளா பக்கம் எஸ்டேட் வேலைக்கு சென்று விட்டதால் , இவன் அந்த பொறுப்பை ஏற்றான் .
சின்னமாடன் பெருமாள் போல அல்ல , பழகுவதற்கு இனியவன் . யாரிடமும் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டான் , நாடார் ஆளுங்களோட சின்னப் பிள்ளைகளை எல்லாம் அவங்கவங்களோட
அப்பா பெயரைச் சொல்லி பின்னால் 'முதலாளி மகன்' என்று சேர்த்துக் கொள்வான் . திருவிழா போன்ற நல்ல நாட்களில் இது வேண்டும் , அது வேண்டும் என்று கேட்க மாட்டான் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான் . சிலர் துணிமணி , சிலர் தேங்காய் , சிலர் வத்தல் என்று இந்தப் பட்டியல் நீளும் . மாதத்திற்கு ஒரு மாட்டிற்கு 20 ரூபாய் வீதம் எல்லோரிடமும் மேய்ச்சல் காசு வாங்குவான் . இதில் கூட கடன் சொல்கிற பரமாத்மாக்களும் இந்த ஊரில் உண்டு . மேலும் இவை தவிர தினமும் வீடுவீடாக சென்று போதுமான அளவுக்கு சாப்பாடு வாங்குவான் . அப்படி வாங்கிக் கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டில் உள்ள மாடுகள் பற்றி கூறுவான் . இன்னும் இரண்டு நாள்ல பெரிய மாடு கன்று போட்டுரும், சின்ன மாடு இப்பத்தான் முடை அடித்திருக்கிறது... என்று .
மாடனுக்கு ஒரு பெருமை என்னவென்றால் , அவன் பிள்ளைகள் எதுவும் அவன் சொல் பேச்சு கேட்பதில்லை , ஆனால் இந்த மாடுகள் மிக நன்றாக அவனுடைய சொல்லுக்கு கட்டுப்படும் . என்ன ஒவ்வொன்றும் விதவிதமான பாசைகள் (பா....பா, ஏ...அருக்க நில்லு , ர் ர் ர் ரிடிகும் .... ர் ர் ர் ரிடிகும், ஹா....ஹா....ஹா). இவை தவிர சில துகளை மட்டையை அடிப்பது போல ஓங்கினால்தான் கட்டுப்படும் . பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு , மனிதனுடன் ஒப்பிடும்போது இந்த மாட்டிற்கு பேச , சிரிக்க மட்டும் தெரிவதில்லை . மாடுகளுக்கு அடுத்தபடியாக மாடன் சின்ன பிள்ளைகள் மீது ரொம்ப பிரியமாக இருப்பான் . தினமும் மாடு மேய்க்கும் போது காட்டில் கிடைக்கும் இலந்த பழங்களையெல்லாம் பறித்து , இரவு சோறு எடுக்கப் போகும் நேரம் , எல்லா சின்னப்பிள்ளைவ கையிலும் கொடுப்பான் . நிறைய பிள்ளைகள் இதனால் அவனை ' இலந்தபழ மாடன் என்றே சொல்லும் .
இலந்தப்பழம் பறிக்கும் போது அதில் உள்ள முட்கள் பல சமயங்களில் இவனுடைய விரலில் குத்திக் காயப்படுத்தும் . ஆனாலும் இவனுக்கு அந்த காயங்கள் எல்லாம் , அந்த சிறு பிள்ளைகள் கையில் பழத்தை கொடுத்தவுடன் அவர்கள் படுகிற சந்தோஷத்திற்கு முன்பு ஒன்றுமில்லாமல் போய்விடும் . அவன் மாடுகளை அடிக்கவே மாட்டான் . மாடு ரொம்ப வம்பு பண்ணினால் அதிகபட்சம் வாலைப் பிடித்துத் திருகுவான் .
பலசமயங்களில் அடிப்பதுபோல பனை மட்டையை ஓங்குவான் , ஆனால் அடிக்க மாட்டான். சில சமயங்களில் இவனுக்கே தெரியாமல் சில மாடுகள் ஏதேனும் விளைநிலங்களில் பாய்ந்து , அந்த மாசிலை சிறிது அழித்து விடுவதும் உண்டு . அப்படிப்பட்ட நேரங்களில் கூட நிலத்துக்குச் சொந்தக்காரன் கோபத்தில் இவனை இரண்டு அடி அடித்தால் கூட வாங்கிக் கொள்வான் , ஆனால் மாடுகளை அடிக்க சம்மதிக்க மாட்டான் . அவனைப் பொருத்தவரை அவன் மனம் என்கிற நிலம் மாடுகளும் மாடுகள் சார்ந்த இடமும் .
பல வேளைகளில் மாடுகள் காட்டிலேயே கன்று போட்டுவிடும் . அப்படி போடுகிற கன்றுகளையும் கூட நல்ல முறையில் வீட்டிற்கு மாடன் கொண்டுவந்து சேர்த்து விடுவான். மேலும் மாடுகளுக்கு ஏதேனும் நோய் வந்தால் கறுப்பட்டியுடன் இஞ்சி, சீரகம் கலந்து இடித்து இவனே அவற்றின் வாயில் வைத்துத் திணிப்பான் . புதிதாக பிறக்கும் கன்று குட்டிகளுக்கு முதல் முத்தம் அவனுடைய துதான் , தாய் மாடிர்க்கு முன்பே ! நிறைய வீடுகளில் கன்று ஈன்றவுடன் முதல் முறை சீமைப்பால் கோவிலுக்கும் (சாமிக்கும்) , இரண்டாவது மாடனுக்கும் தான் .
மாடனுடய பிள்ளைகள் என்றாவது மேய்ச்சலுக்குச் சென்று வந்த பின் , மறுநாள் மாடன் மேய்ச்சல் முடிந்து வந்ததும் யார் முந்தின நாள் சென்றார்களோ , அவர்களுக்கு குறைந்தது ஒரு அடியாவது விழும். இந்த மாதிரி நீ இன்னார் மாட்டை அடித்திருக்கிராய் என்று மிகச் சரியாக சொல்லி விடுவான் . இதற்கு பயந்து அவனுடைய பிள்ளைகள் மாடன் இல்லாத நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லவே யோசிப்பார்கள்
காலக் கடிகாரம் கொஞ்சம் வேகமாகவே சுற்றியது . மாடனுக்கு தற்போது 73 வயது ஆகிவிட்டது , முதுமையின் காரணமாக அவனால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. வேலை என்ன ? எழுந்து சரியாக நிற்கக்கூட முடியவில்லை . உடம்பு தள்ளாட்டம் , கண்பார்வை குறைவு, இளைப்பு . ... இன்னும் பல நோய்கள் சேர்ந்துகொண்டது . தற்போது மாடுகள் எல்லாம் நிறைய குறைந்துவிட்டன , காரணம் மேய்ச்சல் நிலங்கள் இல்லாததுதான். அதற்குக் காரணம் தற்போது அந்த ஊரைச் சுற்றிலும் நிறைய காற்றாலைகள் உண்டாகி இருந்தன , மின் உற்பத்திக்காக .
எனவே ,அந்த காற்றாலைகளுக்காக ஊரை சுற்றி உள்ள முக்கால்வாசி நிலங்களை வாங்கி அதை சுற்றி வேலி போட்டு இருந்தார்கள் . அதனால் மாடுகள் மேய இடங்களே இல்லை . இன்னும் சொல்லப்போனால், மாடன் அளவுக்கு அவனுக்கு அடுத்து மாடு மேய்க்க சென்றவர்கள் இல்லை, சும்மா ஏனோதானோவென்று வேலை செய்தார்கள் .
ஒரு காலத்தில் 150 மாடுகள் இருந்த இடத்தில் இன்று வெறும் 50 மாடுகளே இருந்தன . நிற்க!
இன்று அதிகாலை சரியாக 3 மணிக்கு மாடன் இறந்துவிட்டான் . நேற்று இரவில் இருந்தே நெஞ்சு வலிப்பதாக கூறி வந்தவன் அதிகாலை உயிரை விட்டிருந்தான். பொதுவாக தாழ்ந்த ஜாதிக்காரர்கள் வீட்டிற்கு துஷ்டி கேட்க நாடார் வீடுகளிலிருந்து அதிகமானோர் வருவதில்லை , ஆனாலும் மாடனுக்காக நிறைய பேர் வந்திருந்தார்கள் .
சரியாக காலை 9 மணிக்கெல்லாம் மாடனை பாடையில் கட்டி தூக்கி சென்றார்கள் குருசில் புதைக்க . அவர்கள் சரியாக வடக்குத் தெரு தாண்டி சென்றதும் கீழே தெருவில் இருந்த மொத்த மாடுகளையும் புதியான் ஓட்டிச் சென்றான் இவர்களுக்கு முன்பாக . இது ஏதோ தற்செயலாக நடந்தாலும் , அந்த மாடுகள் எல்லாம் வரிசையாக மாடனை வழியனுப்ப வந்திருந்த தாகவே பார்த்தவர்கள் அனைவரும் நினைத்தார்கள் . மாடன் என்கிற பெயருக்கு இவன் பொருத்தமானவன் தான் என மனதிற்குள் நினைத்து கொண்டார் ஒரு பெரியவர் .
மாடனை புதைத்துவிட்டு எல்லோரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள் . ஆனாலும் அவனுடைய நினைவுகள் என்றும் புதைந்து போகாது. தற்போது மாடுகளை மேய்க்கிற புதியான் மாடுகளை மேய்த்து விட்டு அன்று மாலையில் தற்செயலாக குருசு பக்கம் மாடுகளுடன் வந்தான் . இவன் கூட மாடனுக்கு ஒருவகையில் தூரத்து சொந்தம்தான் .
அந்த குருசில் (கல்லறை தோட்டம்) எப்போதுமே நிறைய புற்களும் , செடிகளும் வளர்ந்திருக்கும் . ஆனாலும் , நிறைய மாடுகள் மேயாமல் அவனை புதைத்திருந்த குழி அருகிலேயே நின்றன . யார் கண்டது? ஒருவேளை சின்னமாடன் அவைகளை தடவிக் கொடுக்கிறானோ ? என்னவோ!!