Thursday, May 27, 2021

அழகான பெண்ணும் , அண்ணா என்கிற வார்த்தையும்


      கினிங் , கினிங் என்ற சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்தது . என்னை யாரால் கட்டுப்படுத்த முடியும் என்று திமிறி வரும் காளை போல அந்த நோக்கியா செல்போன் சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அதை நிறுத்துவதற்கு ஒரே ஒரு ஆளால்தான் முடியும் ,  ஆனால் அவரும் தற்போது கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறார் . பக்கத்து அறையிலிருந்த அப்பா அந்த போனின் சத்தத்தை எல்லாம் மிஞ்சும் வகையில் சத்தம் போட்டார் . 

    ஏல நாயே !  எந்திரி மணி 7 ஆவுது ,  இன்னும் தூக்கம் என்ன வேண்டி கிடக்கு உனக்கு ? ஏடி உன்  அருமை  மகனை எழுப்பு ,  இன்னைக்கு முதல் நாள் காலேஜ் போக போறனா ,  இல்லையா ?

     அம்மா உடனே வேக வேகமாக வந்து அவன் முதுகில் தட்டி அவனை எழுப்பி ,  ஏன் ராசா அம்மாவை எழுப்பி விட சொல்ல வேண்டியதுதானே ?  ஏன் இதைப் போட்டு இந்த கத்து கத்து வைக்கிற !!

    வேகம் வேகமாக எழுந்த பெஞ்சமின் கடிகாரம் பார்த்தான் ,  நேரே பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி பல் தேய்த்து குளித்து கிட்டத்தட்ட எட்டு முப்பது மணிக்கு எல்லாம் ரெடியாகி அவனுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் - யை எடுத்துக்கொண்டு சுரண்டைக்கு கிளம்பினான் .

      நேற்று கல்லூரி போன் செய்து பேசியபோது ஒன்பது இருபது கெல்லாம் கல்லூரி ஆரம்பித்து விடுமென்றும் ,  சுரண்டைக்கு கல்லூரி பேருந்து சரியாக 8.50 மணிக்கு எல்லாம் வந்துவிடும் என கூறியிருந்தனர் .  சீக்கிரம் சுரண்டை சென்று கல்லூரி பேருந்தை பிடித்து விட வேண்டும் என வண்டியை விரட்டினான் . போகிற வழியில்தான் அது என்ன தார்ரோடா இல்லை சின்ன கோடா என்று  சொல்வது போலிருந்தது .  குண்டும் குழியுமாக ரோடு அந்த ரோட்டில் சென்றால் கண்டிப்பாக வயிற்றுவலி இதுவரை வராதவனுக்கு கூட வந்துவிடும் . 

     ரோடு என்பதற்கு எந்தவிதமான ஒழுங்கும் அதில் இல்லை ! அது சரி உங்களிடம் இல்லாதவற்றை எங்களிடம் மட்டும் நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என்று கேட்டன ரோடுகள் ?

    பெஞ்சமின் இன்றுதான் B.Ed படிப்பதற்காக முதல் நாள் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறான் பிஎஸ்சி முடித்து ஐந்து வருடங்கள் ஆன பின்பு திடீரென்று எந்த மரத்தின் அடியிலோ இல்லை ,  இல்லை , எதினடியிலோ கிடைத்த ஞானத்தினால் இந்த வருடம் B.Ed சேர்ந்திருக்கிறான் . 

     இவனைப் பற்றி பெரிதாக சொல்ல எதுவுமில்லை 5.8 அடி உயரம் , 2.5 அங்குலம் 88 கிலோ எடை அவனை பார்க்கிற எல்லோருமே தற்போது அவனுடைய வயதை விட ஆறு வயது அதிகமாகவே கணிப்பார்கள்  , உபயம் : தொப்பை . 

     முதல் நாள் என்பதால் சட்டையை பேன்டினுள் புகுத்தி லெதர் பெல்ட் போட்டு ,  உட்லண்ட்ஸ் ஷூவும் போட்டிருந்தான் .  கல்லூரி பேருந்தை பிடித்து ஏறி உட்கார்ந்ததும் மனதில் வேண்டிக்கொண்டான் .  கடவுளே எந்த பிகரும் என்னை அண்ணன் என்று சொல்லிவிடக்கூடாது ,  முக்கியமா நல்ல கலரான ஃபிகர்ஸ் . 

     கல்லூரி  கிட்டத்தட்ட மொத்தம் 70 ஏக்கர்களை விழுங்கி இருந்தது .   அந்த கேம்பஸில் இல்லாத கல்லூரிகளே இல்லை எனலாம் ஸ்கூலில் ஆரம்பித்து ஆர்ட்ஸ் , சயின்ஸ் இன்ஜினியரிங் என்று எல்லா கல்லூரிகளுமே  இருந்தது . 

    அவனுடைய வகுப்பில் மொத்தம் 100 பேர் இருந்தனர் .  அதில் ஆண்கள் 20 ,  பெண்கள் 80 .  இவனது அருகில் இருந்தவன் சொன்னான் , சார் ஒவ்வொருத்தரும் நான்கு ஃபிகர்களை பிக்கப் பண்ணலாம் !  பரவாயில்லை ! பசங்க எல்லாருக்கும் பொதுப்புத்திதான் போல என்று நினைத்துக் கொண்டான் .  B.Ed மற்ற படிப்புகள் போல இல்லை  . இதில் சென்ற வருடம் டிகிரி முடித்தவர்களும் இருந்தார்கள் , சென்ற 20 ஆம் நூற்றாண்டில் முடித்தவர்களும் இருந்தார்கள் .  ஏனென்றால் கோர்ஸ் அப்படி !

    பெண்களிடம் பேச இவனுக்கு அதிகமாகவே கூச்சம் ,  இவ்வளவுக்கும் இவனும் டிகிரி படித்த போது சகஜமாக பேசுவான் . தற்போது ஐந்து வருட இடைவெளி விழுந்ததால் கொஞ்சம் தயக்கம்.

 முதல்நாள் எப்போதுமே முக்கியமானது நினைவுகளுக்கும், கனவுகளுக்கும் .  ஒவ்வொரு staff -ஆக வந்து அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ,  மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்தி கொள்ளுமாறு கூறினர் . 

     அவள் யார் ? அந்த நாலாவது பெஞ்சில் ,  கலராக -  கண்ணாடி போட்டுக்கொண்டு , ஜீராவில் விழுந்த ரசகுல்லா போல ?  அவள் பெயர் என்ன ?  காதுகளை உன்னிப்பாக்கிக் கொண்டான் . 

    அவள் பெயர் மஞ்சு ,  என்ன ஒரு 5 அடி இருப்பாள் ! அப்பப்பா !  என்ன ஒரு ஃபேஷியல் எக்ஸ்பிரஷன் !  சுண்டினால் அப்படியே ............ , வேண்டாம் வேண்டாம் அமைதியான குளத்தில் கல்லெரிய கூடாது , அடடா என்ன கலர் பரவாயில்லை ! இந்த B.Ed ஒரு வருடம் போவதே தெரியாது போல , ஒரு வழியாக அவளை எங்கே பார்த்தேன் என ஞாபகம் வந்தது . ஆம்! நான் B.Ed பற்றிய டீடெய்ல்ஸ் விசாரிக்க முதன் முதலில் கல்லூரி வந்தபோது அவளும், அவள் அம்மாவும் பிரின்ஸ்பால் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார்கள் ,  அன்று அவள் பிரவுன் கலர் சுடிதார் அணிந்திருந்தாள் . 

   கல்லூரி பரவாயில்லை ,  ஓரளவு நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது . என்ன  நிறைய பெண்கள் என்னை அண்ணா என்று அழைக்கும் போது தான் மனசு ஒரு மாதிரி வலித்தது .  இப்படி தெரிஞ்சிருந்தா கழுதை  அஞ்சு வருஷமா கொஞ்சம் குறைத்து தின்னிருப்பேன் . 

      ஒரு மாதம் ஆயிற்று , அவளுடன் நான் இன்னமும் பேசவே இல்லை. நண்பர்களில் ராமனிடம் மட்டும் கூறியிருந்தேன் , அவள் என்னை அதிகமாக டிஸ்டப் செய்கிறாள் என! அவனும் கூட அவன் பங்குக்கு ஒரு சில அணுகுண்டுகளை போட்டான்?

     அதுவும் அடிக்கடி உன்னை பாக்குது -  இதுவே அவன் கிரவுண்டில் வைத்து சொல்லியிருந்தால் அவனை தூக்கி இரண்டு சுற்று சுற்றி கீழே இறக்கிவிட்டு இருப்பேன் .  வகுப்பறை என்பதால் அமைதி காத்தேன் இடையிடையே கொஞ்சம் கொஞ்சம் கவிதையெல்லாம் எழுதினேன் உதாரணத்துக்கு ஒன்று

    அவளும் நானும் அதிகமாக பார்த்துக் கொண்டோம் 

 'நான் பார்க்காத போது அவள் என்னையும் , 

அவள் பார்க்காத போது அவளை நானும்'

 (நினைப்புதான்) 

தினமும் மனதில் நினைத்துக் கொள்வேன் எப்படியாவது அவளிடம் பேசி விட வேண்டுமென ,  ஆனால் நினைப்பதோடு சரி .  இதுவரை அவளிடம் பேசவில்லை .  அவளைப் பற்றிய கொஞ்சம் விஷயங்களும் சேகரித்து இருந்தேன் . 

     வயது : என்னை விட ஆறு வயது கம்மி ஒருவழியாக என்னுடைய வயதை உங்களிடம் சொல்லவே இல்லை பார்த்தீர்களா !?

   இருவரும் ஒரே ரிலிஜியன் !  அவளுடைய அப்பா தமிழன் , அம்மா மலையாளி - ஓஹோ கலப்பினம் என்பதால் தான் சும்மா பூசி மெழுகின  மாதிரி இருக்காளோ!   சரி எது எப்படியோ கல்யாணம் பண்ணினா  இவளைத்தான் ! 

     பாதி வருடம் முடிந்து விட்டது, இன்னும் பேசவே இல்லை . சில சமயம் பேசியிருந்தாலும் ,  அதுவும் பாடத்தில் வரும் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகத்தான் .  அவளிடம் எப்படி பர்சனலாக பேசுவது என்று பல முறை ரிகர்சல் செய்து இருப்பேன்.ஆனால் எதுவும் நடக்கவில்லை . 

     அந்த நாளும் ஒரு வழியாக வந்தது .  பொங்கல் விழாவின் போது மஞ்சுவின் பெயர் நிறைய ப்ரோக்ராம்ஸ்-ல் இருந்தது.  எங்கள் குரூப்புக்கு நான்தான் லீடர்.  எனவே மஞ்சுவை தனியாக அழைத்து பொங்கல் பங்ஷன் துவங்குவதற்கு முன்பாக 

   என்ன சாப்பிட்டாச்சா ? 

 ஓ  சாப்பிட்டேன் , நீங்க சாப்டீங்களா .

  அப்புறம் நீங்க என்ன என்ன ப்ரோக்ராம் எல்லாம் பண்றீங்க ஏன்னா , உங்கள் பெயர்  நிறைய programs-ல வருது ...

    ஓ அப்படியா !  ஒரு நிமிஷம் !! 

   பின்னர்  ஐந்து நிமிடம் கழித்து அவளுடைய நண்பியுடன் வந்தாள் ; 

 ஒருத்தர் எத்தனை programs participate - பண்ணலாம் ? 

  நான் இரண்டு எனக் கூறினேன் 

    உடனே சரி அண்ணா , அப்ப நான்  Quiz program-லயும்  ரங்கோலி லயும் இருக்கிறேன் ! 

 ஓகே , வா அண்ணா ??

..............

..............

..............


   என்ன பாக்கறீங்க? அதிர்ச்சியில கிளியாத காது - ன்னு உலகத்தில எதுவும்  இருக்கா ??